நாமக்கல்: 'ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும், 11ல், பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும்' என, இந்து மக்கள் கட்சியின், மாநில செயலாளர் கிருஷ்ணசாமி, நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வரும், 11ல், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது. அன்றைய தினம், சுவாமியை தரிசனம் செய்ய, பல்வேறு மாநிலம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும், ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.அன்று, நாமக்கல் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், சிறப்பு பஸ்கள், அதிகளவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நகரில் போக்குவரத்து மாற்றம் செய்வதால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர், பொதுமக்கள், பல்வேறு பணிகளுக்கு செல்லும் அலுவலர் மற்றும் பணியாளர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்.அவற்றை கருத்தில் கொண்டு, அனுமன் ஜெயந்தி அன்று (ஜன., 11), நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.