ப.வேலுார்: குடிநீர் வழங்க மறுக்கும் சேளூர் செல்லப்பம்பாளையம் பஞ்., நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். ப.வேலுார் அருகே, சேளூர் செல்லப்பம்பாளையம், அருந்ததியர் காலனியில், 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, காவிரி குடிநீருக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 5 உள்ளது. இதன் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். இந்நிலையில், சில மாதங்களாக குடிநீர் குறைந்தளவே சேளூர் செல்லப்பம்பாளையம் பஞ்., நிர்வாகம் மக்களுக்கு வழங்கி வருவதாகவும், சில நாட்களாக முற்றிலும் குடிநீர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, கபிலர்மலை பி.டி.ஓ., அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், எங்களுக்கு தண்ணீர் தர மறுக்கும், சேளூர் செல்லப்பம்பாளையம் பஞ்., நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிநீர் பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனை, சேளூர் செல்லப்பம்பாளையம் பொதுமக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.தகவலறிந்து வந்த ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, சம்பந்தப்பட்ட பஞ்., நிர்வாகத்திடம் பேசி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும், என உறுதி அளித்ததால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.