நாமக்கல்: பட்டப்பகலில் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், 19 பவுன் நகை, இரண்டு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.நாமக்கல் இ.பி., காலனியை சேர்ந்தவர் லாரி அதிபர் பழனிசாமி, 55. இவரது மனைவி பூங்கொடி, 50. இவர் டெய்லரிங் கடை நடத்தி வருகிறார். தம்பதியருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். பழனிசாமி, கடந்த, 20ல், லாரிக்கு சென்று விட்டார். அவரது மனைவி பூங்கொடி, நேற்று மதியம், 12:30 மணிக்கு, வீட்டை பூட்டிவிட்டு டெய்லரிங் கடைக்கு சென்று விட்டார். மாலை, 4:30 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தெற்குபக்கம் உள்ள கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் இருந்த அலமாறி உடைக்கப்பட்டு, அதில் இருந்து, 19 பவுன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, நாமக்கல் போலீசில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், சென்னை பதிவு எண் கொண்ட, 'இன்னோவா' காரில் வந்த மர்ம நபர்கள், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.