சேந்தமங்கலம், 'மிளகு செடியில் காணப்படும் வாடல் நோயை கட்டுப்படுத்த, விவசாயிகள் பயிர் பாதுகாப்பு முறையை கடைப்பிடிக்க வேண்டும்' என, கொல்லிமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கொல்லிமலையில், 7,000 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் மிளகு சாகுபடி செய்து வருகின்றனர். மிளகு செடியில் வாடல் நோயானது, ஒரு சில விவசாய தோட்டங்களில் ஆங்காங்கே காணப்படுகிறது. இந்த நோய் தாக்குதல் காரணமாக, இளம் இலைகள் மற்றும் ஓடு தண்டினுடைய நுனி பலுப்பாக மாறி, இலைகள் மற்றும் சரங்கள் கொட்டி விடுகின்றன. பின், செடிகள் ஒரு மாதத்திற்குள் காய்ந்து விடுகின்றன.இந்த மிளகு வாடல் நோயை கட்டுப்படுத்த, இறந்த செடிகளை தோட்டத்திலிருந்து வேரோடு அகற்றிவிட வேண்டும். மிளகு தோட்டத்தில் தண்ணீர் தேங்காதவாறு, வடிகால் வசதியை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பருவமழை தொடங்கியவுடன், மே, ஜூன் மாதங்களில், டிரைக்கோடெர்மா விரிடி என்ற பூஞ்சான உயிரியை, ஒரு செடிக்கு, 50 கிராம் என்ற அளவில், வேப்பம் புண்ணாக்குடன் கலந்து செடியை சுற்றி அடிப்பாகத்தில் இட வேண்டும்.ஒரு சதவீதம் போர்டோ கலவையை கொண்டு இலைகளில் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில், மூன்று கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு அல்லது மெட்டலாக்ஸில் -மேன்கோசெப், இரண்டு கிராம் வீதம் கலந்து, ஒரு செடிக்கு ஐந்து முதல், பத்து லிட்டர் வீதம் எல்லா செடிகளும் நனையும்படி தெளிக்க வேண்டும். மிளகு அறுவடைக்குப்பின், மாதம் ஒரு முறை என, இரண்டு மாத காலத்திற்கு, தொடர்ந்து தெளித்தால் மிளகு வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.