இரும்பு பைப் விவகாரம் குறித்து விசாரிக்க டவுன் பஞ்., துணை இயக்குனர் தலைமையில் குழு
ப.வேலுார், ஜன. 3--ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், இரும்பு பைப் எடுத்து செல்லப்பட்டது குறித்து விசாரிக்க, டவுன் பஞ்., துணை இயக்குனர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், செயல் அலுவலராக சோமசுந்தரம் உள்ளனர். கடந்த டிச., 29ல் டவுன் பஞ்., அலுவலகத்தில் இருந்து, இரும்பு பைப்புகளை எடுத்து சென்ற மினி ஆட்டோவை முற்றுகையிட்டு, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் கவுன்சிலர்கள் ஒப்படைத்தனர். மேலும், அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி, தி.மு.க.,வை சேர்ந்த டவுன் பஞ்., துணைத்தலைவர் ராஜா தலைமையில், 10 கவுன்சிலர்கள் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, இரும்பு பைப் குறித்து விசாரணை நடத்த மாவட்ட டவுன் பஞ்., துணை இயக்குனர் குருராஜன் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ப.வேலுார் டவுன் பஞ்., துணைத் தலைவர் ராஜா கூறுகையில்,'' டவுன் பஞ்.,ல் இருந்த மின் மோட்டார்கள், சில மாதங்களுக்கு முன் வாங்கப்பட்ட பேட்டரி வண்டிகள் மற்றும் இரும்பு பைப்புகள், அதிகாரிகள் ஒத்துழைப்போடு திருட்டு போயுள்ளன. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கவுன்சிலர்கள் புகார் அளித்துள்ளோம். உரிய தீர்வு கிடைக்காவிட்டால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.இது குறித்து, மாவட்ட டவுன் பஞ்., துணை இயக்குனர் குருராஜன் கூறுகையில்,'' ப.வேலுார் டவுன் பஞ்.,க்கு சொந்தமான இரும்பு பைப்புகள் மாயமானது குறித்து, விசாரணை முடிவில் முழு விபரம் தெரியவரும். செயல் அலுவலர், அங்குள்ள பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பேன்,'' என்றார்.