நாமக்கல்: 'பொதுமக்கள், வர்த்தக நிறுவனத்தினர் பாதிக்காமல் இருக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், மேம்பாலத்தின் கீழ், சர்வீஸ் சாலையில், தடுப்புச்சுவர் அமைப்பதை நிறுத்த வேண்டும்' என, பள்ளிப்பாளையம் அனைத்து வர்த்தக வணிக வியாபாரிகள் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை - கன்னியாகுமரி தொழில் தட திட்டத்தில், மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிப்பாளையம் - திருச்செங்கோடு சாலை, ஜீவா செட் முதல், சங்ககிரி பிரிவு சாலை வரை மேம்பாலத்தின் கீழ் இரு வழிச்சாலையில் (சர்வீஸ் சாலை) நடுவில் தடுப்புச்சுவர் (சென்டர் மீடியன்) அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.சாலை நடுவே அமைக்கப்படும் தடுப்புச்சுவர், இடைவெளி இல்லாமல் கட்டப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் அனைவரும், ஒன்றரை கி.மீ., துாரம் சென்று திரும்பி வரும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அதனால், கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், மேம்பாலத்தின் கீழ் சாலை நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்படுவதால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படும் என்பதால், விபத்து மற்றும் போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. கடந்த, நான்கு ஆண்டுகளாக கொரோனா பேரிடர் காலத்தில் இருந்தும், மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக, இங்குள்ள வணிக வர்த்தக கடைகள் மிகவும் பாதிக்கப்பட்டு, சிரமத்துடன் இயங்கி வருகிறது.அதன் காரணமாக, பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், தடுப்பு சுவர் அமைத்தால், மேலும் வர்த்தக நிறுவனங்கள், பொதுமக்களின் வாழ்வாதாரமும் மேலும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படும்.பொதுமக்கள், வாகனங்கள் இருபுறம் உள்ள கடைகளுக்கு சென்று வர ஏதுவாகவும், சாலை ஓரம் கடைகளின் முன் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து பாதிக்காமல் பாலத்தின் கீழ் வாகனங்களை நிறுத்தி, இடையூறு இல்லாமல் சென்று வரவும், தடுப்புச்சுவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.