| ADDED : ஜன 01, 2024 12:22 PM
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அருகே, சாலையின் இருபுறமும் அடைத்தவாறு கார்களை நிறுத்துவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அங்கு தினந்தோறும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வெளியூர்களில் இருந்து கார் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்கள், செல்லாண்டியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் பார்க்கிங் வளாகத்தில் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.இதில் பலர், தங்களது கார்களை ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள திருப்பாக்குளத்தெரு சாலையின் இருபக்கமும் நிறுத்திச்செல்கின்றனர். அவ்வாறு நிறுத்தும் வாகனங்களால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வாகனங்களை உள்ளே, வெளியே கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து செல்ல கடும் சிரமப்படுகின்றனர்.தற்போது, சபரிமலை, மேல்மருவத்துார் மற்றும் அறுபடைவீடுகளுக்கு செல்லும் பக்தர்கள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாகனங்களை முறையாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.