| ADDED : பிப் 17, 2024 12:59 PM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில், 'நான் முதல்வன்' திட்டத்தில், கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொடர்பு அலுவலர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகியோருக்கான சிறப்பு பயிற்சி முகாம், நேற்று மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்தது.இதில், மாவட்ட அளவில் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்களை, அரசு பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் சார்ந்த பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் பேசினார். தொடர்ந்து, கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்களை, அரசு பள்ளிகளுடன் ஒருங்கிணைத்து, 'நான் முதல்வன்' இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த பயிற்சியளிக்கப்பட்டது. கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், எவ்வாறு தங்களது விபரங்களை, 'நான் முதல்வன்' இணையதளத்தில் பதிவு செய்வது. அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்து வரும் நிகழ்ச்சி குறித்தும் கலந்துரையாடப்பட்டன. ஜே.கே.கே., அரசு உதவி பெறும் கல்லுாரி உதவி பேராசிரியர் பாரதி மற்றும் புவனேஸ்வரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.