நாமக்கல், 'நடமாடும் கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் பணிக்கான நேர்முக தேர்வு, நாமக்கல்லில், வரும் ஜூலை, 2ல் நடக்கிறது' என, கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசின், '1962' இலவச கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் திட்டம், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரை காக்கும் நோக்கத்தோடு, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களிலும் கூட, '1962' எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே மருத்துவ ஊர்தி அனுப்பி வைக்கப்படும்.இந்த மருத்துவ ஊர்திகளில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், டிரைவர் ஆகியோர் தயார் நிலையில் இருப்பர். இந்த வாகனங்கள், காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை இயக்கப்படும்.இந்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வு, வரும் ஜூலை, 2 காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை, நாமக்கல் - மோகனுார் சாலையில் அமைந்துள்ள பழைய மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 அவசரகால ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில் நடக்கிறது. டிரைவருக்கான தகுதிகள், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது, 24 முதல், 35க்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம், 162.5 செ.மீ., டிரைவிங் லைசென்ஸ் பெற்று, 3 ஆண்டுகளும், 'பேட்ஜ்' எடுத்து ஒரு ஆண்டும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.ஆம்புலன்ஸ் உதவியாளருக்கான தகுதிகள், பிளஸ் 2 தேர்ச்சியும், வயது, 19 முதல், 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். நேர்முக தேர்வுக்கு வரும் அனைவரும், அசல் சான்றிதழை எடுத்து வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.