| ADDED : ஜூலை 13, 2011 01:50 AM
குன்னூர் : 'மக்களின் தேவைக்கேற்ப உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்,' என
என்.சி.சி., மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. குன்னூர் புனித
அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி., மாணவர்களுக்கு, குன்னூர்
சிம்ஸ்பூங்காவில் உள்ள பழம் பதனிடும் நிலையத்தில் பயிற்சி வழங்கப்பட்டது.
சிம்ஸ்பூங்கா மேலாளர் சிபிலா மேரி மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ''பழம்,
காய்கறி உற்பத்தியில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. பழம்,
காய்கறிகள் உடல் நலத்திற்கு தேவையான உயிர், தாது மற்றும் நார் சத்துகளை
அதிகளவு அளிக்கின்றன. அவற்றில் நீர் சத்து அதிகளவில் இருப்பதால்,
அறுவடைக்கு பின் வெகு விரைவில் அழுகிவிடுகின்றன. இவற்றை தவிர்க்க பழம்,
காய்கறிகளை பதப்படுத்தி வைக்க வேண்டும். நகர்புற மக்கள் மத்தியில், பழ
ஜூஸ், ஜாம், ஜெல்லி, பழ மிட்டாய், ஊறுகாய் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
எனவே, மக்களின் தேவையறிந்து பழங்களை கொண்டு உற்பத்தி பொருட்களை
தயாரித்தால், பழங்கள் வீணாவது தடுக்கப்படும்; வருமானம் அதிகரிக்கும்,''
என்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் ஜான்சன்
மேற்பார்வையில், என்.சி.சி., அதிகாரி மார்ட்டின் செய்திருந்தார்.