| ADDED : ஜூலை 03, 2024 02:30 AM
மேட்டுப்பாளையம்;சிறுமுகையில் ரூ.4 கோடி மதிப்பிலான 10 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட சில்க் பஜார் வீதியில், ரூ.4 கோடி மதிப்பிலான 10 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என வருவாய் துறையினருக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவின் பேரில், மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் தலைமையிலான வருவாய் துறையினர் நேற்று சிறுமுகை போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். அப்போது ஆக்கிரமிப்பு நிலத்தில் போடப்பட்டிருந்த, கார் செட், ஓலை கொட்டகை உள்ளிட்டவைகள் இடித்து அகற்றப்பட்டன.இதுகுறித்து வருவாய் துறையினர் கூறுகையில், ''சிறுமுகை சில்க் பஜார் வீதியில் சுப்பாத்தாள், பழனிசாமி, நடராஜ் உள்ளிட்ட மூவர் 10 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தனர். ஒன்றரை வருடங்களாக அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. பல முறை நேரில் சென்றும், 2 முறை நோட்டீஸ் வழங்கியும், ஒரு முறை இறுதி வாய்ப்பு வழங்கியும் அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதையடுத்து அங்கிருந்த கார் செட், கொட்டகை ஆகியவை இடித்து அகற்றப்பட்டது.இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். மேற்கொண்டு இந்த இடத்தை யாரும் ஆக்கிரமிக்க கூடாது என்பதற்காக, அங்கு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது,'' என்றனர்.--