மேட்டுப்பாளையம்,- காரமடை அருகே பா.ஜ., மாவட்ட நிர்வாகி வீட்டின் முன் குவித்து வைத்திருந்த, தேங்காய் மட்டைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. காரமடை அருகே வடவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தாத்தம்பாளையத்தில், பழனிசாமி, 72, சரஸ்மணி, 65 ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் கார்த்திகேயன், 40. இவர் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., அரசு தொடர்பு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். திருப்பூர் தனியார் கம்பெனியில், இவர் பணியாற்றி வருகிறார். திருப்பூரில் இவருடன் மனைவி, மகள் மற்றும் மாமியார் வசித்து வருகின்றனர். வாரத்திற்கு ஒருமுறை, கார்த்திகேயன் தாத்தம்பாளையத்தில் உள்ள, வயதான பெற்றோரை பார்க்க வருவது வழக்கம். நேற்று முன்தினம் பெற்றோரை பார்க்க ஊருக்கு வந்தார். இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு தாய் சரசு மணி, வெளியே எழுந்து வந்த போது, வீட்டின் முன் காம்பவுண்ட் சுவற்றின் உள்ளே, குவித்து வைத்திருந்த தேங்காய் மட்டைகளில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.இது குறித்து தனது மகன் கார்த்திகேயனிடம் கூறினார். கார்த்திகேயனும், பக்கத்து வீட்டாரும் இணைந்து, வீட்டிற்கு தீ பரவாமல் இருக்க, தண்ணீரை ஊற்றி அணைத்தனர். ஆனால் அனைத்து தேங்காய் மட்டைகளும் எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து காரமடை போலீசில் கார்த்திகேயன் புகார் செய்துள்ளார். மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுஆய்வு செய்தனர்.இது யாரோ திட்டமிட்டு, கார்த்திகேயன் மற்றும் இவரது பெற்றோருக்கு மிரட்டல் விடும் வகையில், வீட்டின் முன் குவித்து வைத்திருந்த தேங்காய் மட்டைக்கு தீ வைத்துள்ளனர் என, தெரியவந்துள்ளது.இதனால் தாத்தம்பாளையம் பகுதியில் பரபரப்பான நிலை உருவாக்கியுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.