| ADDED : ஜூலை 25, 2024 10:16 PM
கூடலுார் : மசினகுடி அருகே மலைவாழ் மக்கள் பெரும்பல் நோக்கு கூட்டுறவு சங்க கடையை காட்டு யானை சேதப்படுத்தியது.முதுமலை மசினகுடி அருகே, மசினகுடி மலைவாழ் மக்கள் பெரும்பல் நோக்கு கூட்டுறவு சங்க கடை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் சேகரிக்கப்படும் புளி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு, 1:30 மணிக்கு, மசினகுடி கோவில் அருகே நுழைந்த காட்டு யானை, கூட்டுறவு சங்க கடையை சேதப்படுத்தியது. கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, 20 கிலோ புளி பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், காட்டு யானையை அங்கிருந்து விரட்டினார். சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'கூட்டுறவு சங்க கடையை சேதப்படுத்திய, யானை வீடுகளை சேதப்படுத்தி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. வனத்துறையினர் முன்னெச்சரிக்கையாக இதனை தடுக்க வேண்டும்,' என்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'காட்டு யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க, வன உழியர்கள் இரவில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்தால் மக்கள் அதற்கு இடையூறு ஏற்படுத்தாமல், வனத்துறைக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். அதனை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.