| ADDED : மே 01, 2024 12:43 AM
பந்தலுார்:முதுமலை புலிகள் காப்பகம் விலங்கூர் வனப்பகுதியில் காட்டெருமை தாக்கியதில் காயமடைந்த வெள்ளன் என்ற வனப் பணியாளரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, விலங்கூர் வனப்பகுதியில் நேற்று வனஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். மதியம், 11:00 மணி அளவில் வனப்பகுதிக்குள் வனக்குழுவினர் நடந்து சென்ற போது, எதிரே வந்த காடெருமை வனத்துறையினரை நோக்கி துரத்தி உள்ளது. அதில், வன பணியாளர் வெள்ளன்,38, என்பவரை தாக்கியது. படுகாயம் அடைந்த அவரை வனத்துறையினர் மீட்டு, கூடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் ஆய்வு செய்ததில் கால் தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயம் இருந்தது தெரிய வந்தது. இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.