| ADDED : ஜூன் 08, 2024 12:36 AM
கூடலுார்;'கூடலுாரில் பருவ மழைக்கு முன் சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.கூடலுாரில் விரைவில் பருவமழை தீவிரமடைய உள்ளது. மழையின் போது வீசும் பலத்த காற்றில், மரங்கள் மற்றும் மரக்கிளைகள் சாலை ஓரங்களில் விழுந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள், ஓட்டுனர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் சூழல் உள்ளது.இந்நிலையில், கூடலுார் கோழிக்கோடு சாலை, தேவர்சோலை சாலை, ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் மரக்கிளைகள் தொங்கி ஆபத்தான நிலையில் உள்ளன. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஓட்டுனர்கள் கூறுகையில், 'கூடலுார் மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். பருவமழையின் போது மரங்கள் அல்லது மரக்கிளைகள் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வெளி மாநில பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுவார்கள். எனவே, முன்னெச்சரிக்கையாக, சாலை ஓரங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மரக் கிளைகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.