| ADDED : ஏப் 12, 2024 12:13 AM
ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்த எனது தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 'தேர்தல் அன்று சுற்றுலா வராதீங்க; உங்க ஊரிலேயே இருந்து, ஓட்டு போடுங்க' சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. லோக்சபா தேர்தல் வரும், 19ல் ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் நடக்கிறது. 'தேர்தலில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட, தகுதியான அனைவரும் 100 சதவீதம் ஓட்டு அளிக்க வேண்டும்,' என்பதை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.அதன் ஒரு கட்டமாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில், '100 சதவீத ஓட்டளிப்பு' குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பூங்காவில் குவிந்திருந்த அனைத்து சுற்றுலா பயணிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, தேர்தல் அலுவலர்கள் சுற்றுலா பயணிகளிடம், 'ஜனநாயக கடமையை ஆற்றும் விதத்தில், தேர்தல் நாளன்று சுற்றுலா வராதீங்க; உங்க ஊரிலேயே இருந்து, தவறாம ஓட்டு போடுங்க' என தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பலர் பங்கேற்றனர்.