- நமது சிறப்பு நிருபர் -இந்தியாவில், அதிக மழை பொழியும் '2வது சிரபுஞ்சி' என்றழைக்கப்படும் பந்தலுார், தேவாலாவில் குடிநீருக்கே மக்கள் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகள் கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளன. அதிகரிக்கும் கட்டுமானம், தொடர்ச்சியாக அழிக்கப்படும் வனம், யானை உட்பட வன விலங்குகளின் வழித்தடங்கள் அழிப்பு, மின் வேலிகள் போன்றவற்றால் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தின் இயல்பு மாறுகிறது.நீர் ஆதாரங்கள் நிறைந்த கூடலுார், பந்தலுாரில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது சிரபுஞ்சியான தேவாலா பகுதி மக்கள், குடிநீருக்கே அல்லாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.நீலகிரியின் காலநிலை மாற்றம் குறித்து, பெங்களூர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை, பேராசிரியர் சிவசக்தி வேல் கூறியதாவது:நீலகிரி மாவட்ட சுற்றுச்சூழல் இயற்கைவளங்கள், முக்கிய நீர் ஆதாரங்கள் சமூக பொருளாதார மையமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 2000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நிலகியில் நிலத்தடி நீர்மட்டம் முக்கிய நீர் ஆதாரம். கடந்த, 42 ஆண்டுகளில் இங்கு சராசரி மழை பொழிவு, 862.41 மி.மீ., ; 2016ல் பதிவான குறைந்தபட்ச மழை அளவு, 464.06 மி. மீ., ஆகும். அதே நேரத்தில், 2021ல் அதிகபட்சமாக, 1,382.91 மி.மீ. மழை பதிவானது. இதன்படி இம்மாவட்டத்தில் இதுவரை, 23 சதவீதம் அளவுக்கு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழை பெய்துள்ளது.பொதுவாக மழை பொழிவு ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாறும். பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு மழையின் வேறுபாடு சாதாரணமாக இருந்து, பின்னர் மீண்டும் அடுத்த மாற்றம் துவங்கும். நீலகிரியின், 214 நாட்கள் மழை பொழிவு என்பது, 184 நாட்களாக தற்போது குறைந்துவிட்டது.1981ல் ஒரே நாளில் அதிகபட்சமாக, 1400 மி.மீ., மழை அளவு பதிவாகி உள்ள நிலையில், 2022 மற்றும் 23வது ஆண்டில் ஒரே நாளில், 2000 மி.மீ., மழை பொழிவு ஏற்பட்டது. கடந்த, 40 ஆண்டுகளில் மழை நாட்களின் எண்ணிக்கை குறைந்து மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது என்பது இதன் மூலம் ஊர்ஜிதமாகி உள்ளது. ஒரே நேரத்தில் அதிக மழை பொழிவு என்பது பாதிப்புகளை ஏற்படுத்துமே தவிர நிலத்தடி நீரை சேமிக்க வழி ஏற்படுத்தாது.சமூக பொருளாதார வளர்ச்சி போர்வையில் உருவாக்கப்படும் உள்கட்டமைப்பு மேம்பாடு, நவீன விவசாயம், புவியியல் மாற்றம் ஆகியவற்றால் இயற்கை பேரிடர் ஏற்படுகிறது. கடுமையான வானிலை நிகழ்வுகள், வெப்ப அலைகள், வறட்சி மற்றும் கனமழை, போன்றவற்றால் மக்கள் இடம்பெயர்வு, பஞ்சம் மற்றும் வறுமைக்கு வழி வகுக்கும்.எனவே, நிலத்தடி நீர் குறைந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்திற்கு உதவும் பாறைகளை அடையாளம் கண்டறிந்து, கிணறுகள் மற்றும் தடுப்பணைகள் போன்றவற்றை ஏற்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் வறட்சி மற்றும் தண்ணீர் பஞ்சத்தை கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில், இரண்டாவது சிரபுஞ்சி என்று அழைக்கப்படும் தேவாலா போலவே மற்ற பகுதிகளும் பாதிக்கப்பட்டு, பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆறுதலாக சாரல்
நீலகிரி மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு, 1,920.80 மி.மீ; அதில், தேவாலாவின் சராசரி மழையளவு, 360 மி.மீ., ஆகும். நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி தேவாலாவில், 7 மி.மீ., மழையளவு பதிவாகி உள்ளது; சாரல் மழை பெய்து வருகிறது.