| ADDED : மார் 31, 2024 09:07 PM
ஊட்டி:நீலகிரியில் தொடரும் வறட்சியால் புல்வெளிகள் காய்ந்து வருவதால், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், சமவெளி பகுதிகளில் இருந்து, பசுந்தீவனத்தை கொள்முதல் செய்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, கடுமையான வெயில் அடித்து வருவதால், நீர்நிலைகள் வறண்டு, புல்வெளிகள் பசுமையை இழந்து, செடி, கொடி, புற்கள் காய்ந்து காணப்படுகிறது.பருவ மழை சரியான நேரத்தில் பெய்யாததால், விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.வனப்பகுதியை ஒட்டிய மேய்ச்சல் நிலங்களிலும், காய்கறிகளின் இலை, தழை மற்றும் கொடிகளின் கழிவு குறைந்து வருவதால், கால்நடைகளுக்கு புற்கள் கொடுக்க முடியாத நிலை உள்ளது. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை.இதனால், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், சம வெளி பகுதிகளில் இருந்து, 'ஓட்ஸ், சோளத்தட்டை' உள்ளிட்டவற்றை விலைக்கு வாங்கி, லாரிகளில் கொண்டு வந்து, கால்நடைகளுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.