| ADDED : ஜூன் 13, 2024 11:29 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் தந்தை, மகனுக்கு இடையே நடந்த தகராறை தடுக்க சென்றவரை கத்தியால் குத்திய நபரை, போலீசார் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம், மகாதேவபுரத்தை சேர்ந்தவர் நாகேந்திரன், 27; கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் நாகராஜ், 46 மற்றும் அவரது மகன் பிரபாகரனுக்கு, 23, இடையே தகராறு ஏற்பட்டது. இதை நாகேந்திரன் தடுத்தார்.அப்போது மாதையன் லே அவுட் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் நவநீத கிருஷ்ணன், 31, அங்கு வந்தார். அவர் நாகேந்திரனை தடுத்து, அவர்கள் குடும்ப விவகாரத்தில் தலையிட வேண்டாம் என கூறியுள்ளார். பின் நாகேந்திரன் மற்றும் நவநீத கிருஷ்ணன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நவநீத கிருஷ்ணன் நாகேந்திரனை கத்தியால் கழுத்து, காதின் பின்புறம், முதுகு பகுதிகளில் குத்தினார்.இதில் நாகேந்திரன் காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகேந்திரனை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து நவநீத கிருஷ்ணனை கைது செய்தனர்.