உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மழை வெள்ளம் புகுந்ததால் பாதிப்பு

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மழை வெள்ளம் புகுந்ததால் பாதிப்பு

ஊட்டி;ஊட்டியில் நேற்று மாலை பெய்த கனமழையால், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் சாக்கடை நீருடன் மழை வெள்ளம் புகுந்து, பஸ்களை நிறுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று மாலை, இரண்டு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஊட்டி படகு இல்லம் சாலை, ரயில்வே பாலம் பகுதியில் வெள்ளம் தேங்கியதால், உள்ளூர் பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வெள்ளத்தில் உள்ளூர் 'பிக்-அப்' வாகனம் சிக்கியதால், ஒரு மணிநேரம் அதில் இருந்தவர்கள் தவித்தனர். டிரைவர் ஜீப்பின் மீது ஏறி நின்று காப்பாற்றுமாறு தெரிவித்தார். தகவலின் பேரில், தீயணைத்து துறையினர் வந்த வாகனத்துடன் இருவரை மீட்டனர்.

வெள்ளம் சூழ்ந்த பணிமனை

இந்நிலையில், ஊட்டியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில், கோடப்பமந்து கால்வாயில் வந்த கழிவு நீருடன் மழை வெள்ளமும் சூழ்ந்தது. இதனால்,போக்குவரத்து கழக கிளை--1 மற்றும் கிளை-2 ல், பணியில் இருந்த ஊழியர்கள் வெளியேறினர். சில பஸ்கள் வாராந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாமல் திரும்பி சென்றன. பஸ்களை பணிமனையில் நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. பொது மேலாளர் முரளி கூறுகையில், ''பணிமனையில் உள்ள குறைபாடுகள் குறித்து மேலதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்