| ADDED : ஜூன் 29, 2024 01:58 AM
குன்னுார்:குன்னுார் நகராட்சியில் சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ள நிலையில் மாதாந்திர கூட்டம் மூன்று மாதங்களாக நடக்காமல் இருப்பது கவுன்சிலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக கடந்த ஏப்., மே மாதங்களில் குன்னுார் நகராட்சி கூட்டம் நடத்தப்படவில்லை. இந்த மாதம் நடத்த வேண்டிய கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை. இதற்கு முன்னதாக கூட்டத்திற்கான அஜெண்டா அறிக்கை இதுவரை தயார் செய்யப்படவில்லை.ஏற்கனவே, 6வது வார்டில் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்து பதவி வகித்து வந்த ஷீலா கேதரின் மறைவுக்கு பிறகு இவரின் வார்டு பணிகள் பெரும்பாலும் நடக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.குறிப்பாக நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மருத்துவமனை பகுதியில் இருந்து தனியார் பள்ளியையொட்டி அமைந்துள்ள நடைபாதை உடைந்து மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மருத்துவமனை அருகிலேயே முட்புதர்கள் சூழ்ந்து விஷ ஜந்துக்கள் அதிகரித்துள்ளது. தலைவரின் மறைவுக்கு பிறகு துணைத் தலைவர் வாசிம் ராஜா தலைமையில் கூட்டங்கள் நடந்தது. இவர் வெளிநாடு சென்று விட்டதால் இந்த மாதம் கூட்டம் நடத்துவது கேள்விக்குறியாக உள்ளது. பே ரூராட்சியிலும் பாதிப்பு
இதே போல, ஜெகதளா பேரூராட்சியில் மன்ற கூட்டம் கடந்த ஏழு மாதங்களாக நடத்தப்படவில்லை. இது குறித்து, அ.தி.மு.க., கவுன்சிலர் சஜீவன் குன்னுாரில் நடந்த, 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்திற்கு வந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், 'பேரூராட்சியில் சிலரின் அதிகாரப்போக்கு மற்றும் ஊழல் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தீர்வு கிடைக்கவில்லை. மாதாந்திர கூட்டத்தை உடனடியாக கூட்ட உத்தரவிட வேண்டும்,' என்றனர்.