| ADDED : மே 17, 2024 12:17 AM
கூடலுார்;'முதுமலை கும்கி யானைகளை பயன்படுத்தி, தொரப்பள்ளிக்குள் காட்டு யானைகளை நுழைவதை தடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தி உள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம் காரக்குடி வனப்பகுதியில் இருந்து சில யானைகள் இரவில் அகழியை கடந்து, தொரப்பள்ளி சோதனை சாவடி வழியாக தொரப்பள்ளிக்குள் நுழைந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அதிகாலை நேரத்தில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்து சென்று தொரப்பள்ளி வனச் சோதனை சாவடியை கடந்து, முதுமலைக்குள் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. நேற்று முன்தினம், இரவு தொரப்பள்ளிக்குள் நுழைந்த மக்னா யானை, சாலையோரங்களில் கிடைத்த உணவுகளை உண்டு ஊருக்குள் சென்றது. வன ஊழியர்கள் கண்காணித்து விரட்டினாலும், யானை வனப்பகுதிக்குள் செல்லவில்லை.விடிய, விடிய ஊருக்குள் முகாமிட்ட யானை, காலை, 7:00 மணிக்கு தொரப்பள்ளி மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. வனத்துறையினர் வாகனம் மூலம் பின் தொடர்ந்து அதனை முதுமலைக்குள் விரட்டினர். தொடரும் நிகழ்வின் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி உள்ளனர்.மக்கள் கூறுகையில், 'முதுமலையிலிருந்து தொரப்பள்ளிக்குள் இரவில் காட்டு யானை நுழைவதை வனத்துறையினர் நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே, முதுமலையிலிருந்து கும்கி யானைகளை வரவழைத்து, அதன் உதவியுடன், முதுமலையிலிருந்து தொரப்பள்ளிக்குள் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.