உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலர் கண்காட்சி கட்டணம் உயர்வு உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் கடும் அதிருப்தி

மலர் கண்காட்சி கட்டணம் உயர்வு உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் கடும் அதிருப்தி

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக, மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. கண்காட்சியை ஆண்டுதோறும், லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்து செல்கின்றனர்.நடப்பாண்டு, 126வது மலர் கண்காட்சி, வரும், 10ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை, முதன் முதலாக, 10 நாட்கள் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.கண்காட்சியை பார்வையிட வரும் சுற்றுலா பயணியருக்கு, கடந்த ஆண்டு பெரியவர்களுக்கு, 100 ரூபாய், சிறுவர்களுக்கு, 50 ரூபாய் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது. அப்போது உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், நடப்பாண்டு, பெரியவர்களுக்கு, 150 ரூபாய், சிறுவர்களுக்கு, 75 ரூபாய் என, நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.இதேபோல, வரும், 10ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடைபெறும் ரோஜா கண்காட்சி நுழைவு கட்டணமாக, பெரியவர்களுக்கு, 100 ரூபாய், சிறுவர்களுக்கு 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நுழைவு கட்டணம் உயர்வால், சுற்றுலா பயணியர் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசின் உத்தரவின் கீழ் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது' என்றனர்.

குறைக்க கோரிக்கை

ஜெயலலிதா, கருணாநிதி முதல்வர்களாக இருந்த போது, பல முறை, கோடை சீசன் மலர் கண்காட்சியின் போது, கட்டணம் இல்லாமல், இலவசமாக உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நடப்பாண்டு, கோடை வெயிலின் தாக்கத்தால், அனைத்து தரப்பு மக்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், சுற்றுலா வந்து சில நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க குடும்பத்துடன் வரும் போது, நுழைவு கட்டடணத்துக்கு பெரும் தொகை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். பயணியர் நலன்கருதி, 10 நாட்கள் நடைபெறும் கண்காட்சியின் போது, 'நுழைவு கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும் அல்லது கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்' என்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை