| ADDED : மே 28, 2024 11:52 PM
ஊட்டி:ஊட்டி அழகர் மலை பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி, தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டது.ஊட்டி ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்மலை கிராமத்தில், 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலானோர் கூலி வேலைக்கு சென்று, குடும்பங்களை நகர்த்தி வருகின்றனர்.'கிராமத்தில், தண்ணீர் நடைபாதை உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. செங்குத்தான பகுதியில் அமைந்துள்ள கிராமத்திற்கு, நடைபாதை வசதி ஏற்படுத்தி தரவேண்டும்,' என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையில் மக்கள் பயன்படுத்தி வந்த ஒற்றையடி பாதை சரிந்து விழுந்தது. இதனால், மக்கள் நடந்து செல்ல முடியாமல் வழுக்கி விழுந்தனர்.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் அலுவலர்கள் குறிப்பிட்ட இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்நது, மழையின் போது சரிந்து விழுந்த ஒத்தையடி பாதையில், மணல் மூட்டைகள் அடுக்கி மக்கள் நடந்து செல்ல ஏதுவாக, தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டது. இதனால், மக்கள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர். 'விரைவில் நிரந்தர பாதை அமைத்து தரப்படும்,' என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.