ஊட்டி;வளர்ச்சி பணிகளில் கமிஷனர் பாரபட்சம் காட்டுவதாக, 9 தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஊட்டி நகராட்சியில் சாதாரண கூட்டம் கமிஷனர் ஏகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணை தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.கூட்டம் துவங்கியதும், தி.மு.க., கவுன்சிலர்கள், 'நாகமணி, செல்வராஜ், கீதா, அனிதா லட்சுமி, பிளோமின புஷ்பராஜ் பிரியா வினோதனி, மேரி பிளோமின மார்ட்டின், வனிதா, விசாலாட்சி,' ஆகிய, 9 தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்றாக இருக்கையிலிருந்து எழுந்து, பல குற்றச்சாட்டுகளை கூறி கோஷம் எழுப்பினர். குறிப்பாக, வளர்ச்சி பணியில் கமிஷனர் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். இதனால், காரசார விவாதம் ஏற்பட்டது.தொடர்ந்து, டெண்டர் விடுவதில் முறைகேடு, குறிப்பிட்ட வார்டுகளை வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி, நகராட்சி தலைவர் மற்றும் கமிஷனரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு மன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். தலை காட்ட முடியவில்லை
பின், கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் பேசுகையில், 'சுற்றுலா நகரில் கழிப்பறை வசதி இல்லை, தெரு விளக்குகள் இல்லாமல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தெரு நாய் தொல்லையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மாதந்தோறும் நடக்கும் சுகாதார பணியும் நடப்பதில்லை. வார்டுகளில் சுடுகாடுக்கு நடைப்பாதை வசதியும் இல்லை. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றாததால் வார்டு பக்கம் தலைக் காட்ட முடியவில்லை,' என்றனர்.நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில், ''நிதி நிலையை கருத்தில் கொண்டு, நிதியை பகிர்ந்து தான் வளர்ச்சி பணி மேற்கொள்ப்பட்டு வருகிறது. வளர்ச்சி பணியில் எவ்வித பாரபட்சம் காட்டுவதில்லை,''என்றார்.