உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரி சாலையில் நிலச்சரிவுக்கு நிரந்தர தீர்வு; மண் அரிப்பு தடுக்க வெட்டி வேர் நட முடிவு

கோத்தகிரி சாலையில் நிலச்சரிவுக்கு நிரந்தர தீர்வு; மண் அரிப்பு தடுக்க வெட்டி வேர் நட முடிவு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க கான்கிரீட் தடுப்பு சுவர்கள், வெட்டி வேர் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்வதற்கு தனி, தனி சாலைகள் உள்ளன. மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் இயற்கை அழகை ரசித்து செல்லும் அளவிற்கு, ஆபத்துகளும் அதிகம் உள்ளன.வியூ பாயிண்ட் மற்றும் குஞ்சப்பனை அருகே நிலச்சரிவு, பாறைகள் உருண்டு சாலையில் விழும் பகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கன மழை காரணமாக இப்பகுதிகளில், நிலச்சரிவு, பாறைகள் விழுந்ததில் 3 நாட்களாக போக்குவரத்து பாதித்தது. இச்சாலை மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதிகளில் நிலச்சரிவு, பாறைகள் உருண்டு விழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது தென் மேற்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாகவும், போக்குவரத்தை உடனே மேற்கொள்ளும் வகையிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலை துறையினர் எடுத்துள்ளனர்.இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-இந்த சாலையில் நிலச்சரிவு, பாறைகள் உருண்டு விழும் பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடங்களில் கான்கிரீட் தடுப்பு சுவர்களும், கருங்கல் தடுப்பு சுவரும் விரைவில் அமைக்கப்பட உள்ளன.

வெட்டி வேர் நடவு செய்ய முடிவு

நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் விழுந்துள்ள இடத்தில் மண் உறுதியுடன் இல்லை. மீண்டும் கனமழை பெய்தால் மண் சரியும் வாய்ப்புள்ளது. அந்த இடங்களில் செடிகள் குறிப்பாக வெட்டி வேர் அதிகளவில் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளன.இச்சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தாலோ அல்லது நிலச்சரிவு ஏற்பட்டாலோ அதனை உடனே சீர் செய்யும் பொருட்டு ஜே.சி.பி. இயந்திரம், மரம் அறுக்கும் இயந்திரம் போன்றவைகள் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கோத்தகிரி சாலையில் தான் சாலை விபத்துக்களும், இயற்கை பேரிடர்களும் அதிகம் நடைபெறுகிறது. சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிலச்சரிவு ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்டால் அதனை சமாளிக்கவும் உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை