| ADDED : மே 02, 2024 11:45 PM
கூடலுார்:ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், ஊசிமலை முதல் தொரப்பள்ளி வரை, சேதமடைந்த சாலையில், 98 லட்சம் ரூபாய் நிதியில், சீரமைப்பு பணி நடக்கிறது.கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி சீரமைக்கும் பணியை தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர். அனுமாபுரம் முதல் -ஊசிமலை வரையிலான, 16 கி.மீ., துார சாலையை, 70 கோடி ரூபாயில் அகலப்படுத்தி சீரமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.ஆனால், ஊசிமலை முதல் கூடலுார் தொரப்பள்ளி வரையில் சேதம் அடைந்த சாலை சீரமைக்க படாததால் வாகன ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில், இப்பகுதியில் தற்காலிகமாக சாலையை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, ஊசி மலை முதல் தொரப்பள்ளி வரை சேதமடைந்த சாலையில், சீரமைப்பு பணி நடந்து வருகிறது.ஓட்டுனர்கள் கூறுகையில், 'சேதமடைந்த இப்பகுதி சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது வரவேற்ககூடியது. எனினும், பருவமழை காலத்தில் சாலை மேலும் சேதம் அடையும் சூழல் உள்ளது. எனவே, இச்சாலை முழுமையாக சீரமைக்க வேண்டும்,'என்றனர்.