| ADDED : ஜூன் 12, 2024 09:38 PM
குன்னுார்- குன்னுார் சிம்ஸ் பூங்காவிற்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தும் பழுதடைந்த நடைபாதைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 30 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிம்ஸ் பூங்கா மற்ற இடங்களை போல் அல்லாமல் அதிக அளவில் நடைபாதைகள் உள்ளன. இது பெரும்பாலும் சீரமைக்கப்படாமல் சேதமடைந்து காணப்படுகின்றன.கடந்த மாதம் நடந்த, 64வது பழக்கண்காட்சியில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு, 100 ரூபாய், சிறியவர்களுக்கு, 50 ரூபாய் என கட்டண வசூலிக்கப்பட்டது. கேமராக்களுக்கு, 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அதில், மூன்று நாட்களில், நுழைவு கட்டணமாக மொத்தம், 18.50 லட்சம் ரூபாய் தோட்டக்கலைத் துறை மூலம் வசூல் செய்யப்பட்டது. தொடர்ந்து கட்டணம் சற்று குறைத்து வசூலித்ததால், இந்த ஆண்டு மொத்தம், 20 லட்சத்திற்கும் மேல் பூங்காவிற்கு வருமானம் கிடைத்துள்ளது.எனினும், இங்குள்ள நடைபாதைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் சுற்றுலா பயணிகள் தடுமாறி கீழே விழும் அபாயமும் உள்ளது.எனவே, தோட்டக்கலை துறையினர் நடைபாதைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.