| ADDED : ஜூலை 03, 2024 02:31 AM
மேட்டுப்பாளையம்;எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை பெருக்க வேளாண்மை துறை வாயிலாக மானியம் வழங்கப்படவுள்ளது.இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குநர் வெங்கடாசலம் கூறியுள்ளதாவது:-கோவை மாவட்டத்தில், தேசிய எண்ணெய் வித்துகள் இயக்கத்தின் கீழ் 2024-25ம் ஆண்டுக்கு, எண்ணெய் வித்து பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.54.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, 92 எக்டர் பரப்பில் நிலக்கடலை, 50 எக்டர் பரப்பில் எள் பயிரில், செயல் விளக்கத்திடல் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான, உயர் விளைச்சல் ரகமான விதைகளுக்கு, விதை நேர்த்தி செய்ய உயிர் உரங்கள், நுண்ணுாட்டக் கலவை, போன்ற இடுபொருட்கள் மானியத்துடன் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் வாயிலாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை தேர்வு செய்யப்பட்ட, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற உழவர் செயலியின் வாயிலாக பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.----