| ADDED : மே 26, 2024 11:32 PM
பந்தலுார்:பந்தலுார் கையுன்னி பகுதியில் நள்ளிரவில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில் இருந்து அய்யன்கொல்லி செல்லும் சாலை அமைந்துள்ளது. அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு சாலையோரம் இருந்த அயனி பலா மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், இந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வருவாய் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், கூடலுார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய பொறுப்பு அலுவலர் மார்ட்டின் தலைமையிலான குழுவினர், இரவு ஒரு மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து விடியற்காலை, 3:00 மணி வரை சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அறுத்து அகற்றினர். அதனை தொடர்ந்து வாகனங்கள் சென்றன. சம்பவம் நடந்த இடத்தில் மின் கம்பிகள் அறுந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. நேற்று காலை மின் ஊழியர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.