| ADDED : ஜூலை 19, 2024 02:43 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே மிகவும் பழுதடைந்த சாலையில் மக்கள் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.ஊட்டி சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழவன்சேரம்பாடி மற்றும் காவயல் பகுதிகள் அமைந்துள்ளன. கொளப்பள்ளியில் இருந்து அய்யன்கொல்லி செல்லும், நெடுஞ்சாலையில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.இந்த பகுதிகளில் கிராமங்கள் மற்றும் டான்டீ தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன.இந்த பகுதிகளில் மாலை, 4:00 மணிக்கு மேல் யானைகள் உலா வரும் நிலையில், வாகன வசதிகளும் இல்லாததால் மக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இங்கு செல்லும் சாலை மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதனால், அவசர தேவைகளுக்கு கூட, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.இந்த சாலையை சீரமைத்து தர இப்பகுதி மக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் கண்டுகொள்ள வில்லை. எனவே, ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.