| ADDED : ஆக 21, 2024 01:28 AM
பந்தலுார்:--நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 'சசக்ஸ்' தனியார் எஸ்டேட் உள்ளது. இங்கு, இரண்டு புலிகள் இறந்து கிடந்தன. வனக்குழுவினர், அப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இறந்து கிடந்தது, 9- வயது பெண் புலி; 2 வயது ஆண் புலி என்பதும் தெரிந்தது. இறந்த இரண்டு புலிகளின் உடல்களையும், மூன்று டாக்டர்கள் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பின், இரண்டு புலிகளும் அதே பகுதியில் எரியூட்டப்பட்டன.தொடர்ந்து, அப்பகுதியில் நடந்த ஆய்வில், காட்டு பன்றி ஒன்றும் இறந்து கிடந்தது. அதை பிரேத பரிசோதனை செய்தபோது, மரவள்ளி கிழங்கு மற்றும் அரிசியில் விஷம் வைத்து காட்டு பன்றி கொல்லப்பட்டது தெரிந்தது. இதனால், இரு புலிகளும் விஷம் வைத்து கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறியதாவது:பிரேத பரிசோதனையின் முதல்கட்ட ஆய்வு அறிக்கையில், ''விஷம் கலந்த பன்றியின் இறைச்சியை உட்கொண்டதால் இரு புலிகள் இறந்தது தெரிய வந்துள்ளது. ''மேலும், பன்றி இறந்த இடத்தில் புலிகளின் கால்தடம் இருந்ததும் கள ஆய்வில் தெளிவானது. எஸ்டேட் நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார்.