ஊட்டி : நீலகிரி மாவட்டத்திற்கு,தோட்டக்கலை மலை பயிர்கள் துறை மூலம் நடப்பு ஆண்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த, 5.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பண்ணை குட்டை அமைக்க நிதி
நீலகிரியில், தோட்டக்கலை மலை பயிர்கள் பரப்பு விரிவாக்க இயக்கத்தின் கீழ், காய்கறிகள், எலுமிச்சை, அத்தி, அவகேடோ, ஸ்டாபெரி, ஆரஞ்ச், மிளகு, பூண்டு மற்றும் இஞ்சி போன்ற பயிர்களுக்கு, 40 சதவீதம் மானியமாக, ஒரு எக்டருக்கு, 13 ஆயிரத்து, 200 ரூபாய் முதல், ஒரு லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் வரை விதைகள், பழ நாற்றுகள் மற்றும் இயற்கை இடுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும், பண்ணை குட்டை அமைத்திட, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, 75 ஆயிரம் ரூபாய் பசுமை குடில் அமைக்க, சதுர மீட்டருக்கு, 422 முதல், 467.50 ரூபாய் வரையும் வழங்கப்படுகிறது.நிழல் வலைகுடில் அமைக்க, சதுர மீட்டருக்கு, 355 ரூபாய்; பிளாஸ்டிக் நில போர்வைக்கு, 16 ஆயிரம் ரூபாய்; பசுமைகளில் கார்னேஷன் மலர்செடிகள் நடவுக்கு, சதுர மீட்டருக்கு, 350 ரூபாய்; பசுமைக்குடில் லில்லியம் மலர் செடிகள் வளர்க்க, 213 ரூபாய் என, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.காய்கறி மற்றும் பழவிற்பனையை மேம்படுத்த விற்பனை வண்டி, 15 ஆயிரம் ரூபாய்; வாழைத்தார் உரை,12 ஆயிரத்து, 500 ரூபாய் என, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, ஒரு எக்டருக்கு, 3,000 முதல் 4,000 ரூபாய் வரை இயற்கை இடுப்பொருட்கள் வழங்கப்படும். உரம் தயாரிக்க உதவி
மண்புழு உரம் தயாரிக்க 50 ஆயிரம் ரூபாய்; மண்புழு உரம் படுக்கைகள் அமைக்க, 8,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். அறுவடை பின்செய் நேர்த்தி திட்டத்தின் கீழ், காய்கறி மற்றும் கொய் மலரை சேமித்து விற்பனை செய்ய, 'பிரீ கூலிங் யூனிட்' அமைக்க, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு, 35 சதவீதம் மானியமாக, 8.75 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.மேலும், காய்கறிகளை சேமிக்க, 4 லட்சம் ரூபாய் நிதியில், 600 சதுர அடி பரப்பில் சிப்பம் கட்டி அறை அமைக்க, 2 லட்சம் ரூபாய்; காய்கறி குளிர் சேமிப்பு கிடங்கு அமைக்க, ஒரு மெட்ரிக் டன்னிற்கு, 3,500 ரூபாய் என, 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசன திட்டம்
தெளிப்பு நீர் பாசன கருவிகள், 100 சதவீத மானியம், புதிதாக டீசல், மின்மோட்டார் வாங்குவோருக்கு, 50 சதவீத மானியத்தில், 15 ஆயிரம் ரூபாய் பண்ணைக்குட்டை அமைக்க, 75 ஆயிரம் ரூபாய், பின்னேற்பு, 50 சதவீத மானியம் வழங்கப்படும்.தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம்: வாழை சாகுபடிக்கு, தார் ஈன்றிய வாழைகளுக்கு முட்டுக்கள் அமைக்க, ஒரு எக்டருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியம்; பாகற்காய், பீன்ஸ் பயிர்களுக்கு பந்தல் அமைக்க, ஒரு எக்டருக்கு, 3 லட்சம் ரூபாய் பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், 'வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் பயிற்சி அளிக்க, மாவட்ட, மாநில மற்றும் வெளி மாநில சுற்றுலா செல்வது உட்பட, இத்திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஆதார், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சிட்டா, அடங்கல், அனுபோகச் சான்றுடன் தோட்டக்கலை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்,' என்றனர்.