| ADDED : ஏப் 29, 2024 11:19 PM
ஊட்டி;'நீலகிரியில் விதி மீறிய காட்டேஜ்கள் குறித்து கணக்கெடுத்து நோட்டீஸ் அனுப்ப வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியின் சுற்று சூழலுக்கு இடையூறாகவும், விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்களை ' சீல்' வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், இயற்கை காட்சிகளை ரசிக்கும் வண்ணம் பெரும்பாலான காட்டேஜ், சொகுசு விடுதிகள் நகர் பகுதியை விட்டு வெளியிடங்களில் கட்டப்பட்டுள்ளன. இந்த காட்டேஜ் உரிமையாளர்கள், வேளாண், புவியியல், வனத்துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதி பெறாமல் அபாயகரமான பகுதிகளில் கட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.இத்தகைய விதிமீறலை தடுக்க, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் உள்ள, 35 கிராம ஊராட்சிகள், 11 பேரூராட்சி மற்றும் 3 நகராட்சி பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்ட காட்டேஜ்கள் குறித்து அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுக்க, சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி சுற்று சூழல் ஆர்வலர் பெள்ளியப்பன் கூறுகையில், ''நீலகிரியில் கோடை சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. காட்டேஜ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களால் சுற்றுலா பயணியர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் விதிமீறி கட்டப்பட்ட காட்டேஜ், சொகுசு பங்களாக்கள் குறித்து கணக்கெடுத்து விதிமீறல் உள்ள கட்டடங்களுக்கு, 'சீல்' வைக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.