பாலக்காடு : கேரள லோக்சபா தேர்தலில், பாலக்காடு காங்., எம்.எல்.ஏ., ஷாபி, கோழிக்கோடு மாவட்டம் வடகரை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றார்.கேரள மாநிலத்தில் உள்ள, 20 லோக்சபா தொகுதிகளில், காங்., - 14, ஐ.யூ.எம்.எல்., - 2, கேரள காங்கிரஸ் (எம்) - 1, பா.ஜ., - 1, மா.கம்யூ., -1, மற்றவை - 1 என, வெற்றி பெற்றுள்ளன.இந்த தேர்தலில், கோழிக்கோடு மாவட்டம் வடகரை லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக பாலக்காடு எம்.எல்.ஏ., ஷாபி களம் இறக்கப்பட்டார். அங்கு, மா.கம்யூ., சார்பில், கொரோனா காலத்தில் மக்கள் மனதை ஈர்க்கும் வகையில் செயல்பட்ட முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா போட்டியிட்டார்.தேர்தலில், ஷாபி -- 5,57,528 ஓட்டுகள் பெற்று 1,14,506 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சைலஜா 4,43,022 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பெற்றார். ஷாபி வடகரை தொகுதி எம்.பி., ஆன நிலையில், பாலக்காடு சட்டசபை இடைத்தேர்தல் குறித்தான அரசியல் விவாதம் துவங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், பாலக்காட்டில் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்., கட்சிக்கு, இந்த இடைத்தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என்பது உறுதி.கடந்த இரு சட்டசபைத் தேர்தலிலும், மூன்றாம் இடத்திற்குப் போன மா.கம்யூ., கட்சி, சிறந்த வேட்பாளரை நிறுத்தினால் மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் அக்கட்சி உள்ளது. பாலக்காடு தொகுதியில், தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற ஷாபி இல்லாத நிலையில், இத்தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற முனைப்புடன் பாலக்காடு நகராட்சியை ஆளும் பா.ஜ., கட்சிக்கு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'மெட்ரோ மேன்' என்று அழைக்கப்படும் ஸ்ரீதரனை பா.ஜ., வேட்பாளராக களம் இறக்கி, காங்கிரசை மிரள வைத்தது. அப்போது, பா.ஜ., வேட்பாளரை விட, 3,856 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று, ஷாபி வென்றார். ஸ்ரீதரனை போல் பொதுவான வேட்பாளரை இடைத்தேர்தலில் களமிறக்கி, பாலக்காடு தொகுதியை கைப்பற்ற பா.ஜ., திட்டமிட்டுள்ளது.