மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மின்தடை தொடர்வதால் இருளில் மூழ்கிய கிராமங்கள்
கூடலுார்:கூடலுார், பந்தலுாரில் தொடரும் மழையால் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பல பகுதிகளில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர்.கூடலுார், தேவாலா, முதுமலை, மசினகுடி, நடுவட்டம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முதுமலை, மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பிதுருலா பாலத்தின் மீது நள்ளிரவு, 1:45 மூங்கில் துார் விழுந்தது.இரவில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அப்பகுதில் நிறுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறையினர், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் பொக்லைன் உதவியுடன் மூங்கிலை அகற்றி, 3:00 மணிக்கு போக்குவரத்தை சீரமைத்தனர்.புளியம்பாறை, கோழிகொல்லி சாலையில் நேற்று காலை கற்பூரம் மரம் விழுந்து பழங்குடி கிராமத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மரத்தை அகற்றும் பணியில் இரண்டு மணிநேரம் ஈடுபட்டனர்.மைசூரு தேசிய நெடுஞ்சாலை தொரப்பள்ளி அருகே காலை, 10:00 மணிக்கு, மூங்கில் விழுந்து, தமிழக-கேரளா-கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரேம்குமார், ஊழியர்கள் பொக்லைன் உதவியுடன் மூங்கிலை அகற்றி, ஒரு மணி நேரத்துக்கு பின் போக்குவரத்தை சீரமைத்தனர்.ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஊசிமலை அருகே காலை, 10:15 மணிக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.தேவர்சோலை, மச்சிக்கொல்லி கிராம மக்கள் நடந்து செல்ல பயன்படுத்தி வரும் சிமென்ட் சாலையில் உள்ள பாலம் சேதமடைந்ததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். நந்தட்டி அருகே, பகல், 12:00 மணிக்கு மரத்தின் கிளை விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அவ்வழியாக நடந்து சென்ற ஜானகி, 65, என்பவர் மீது மரக்கிளைகள் விழுந்ததால் காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்கள் உதவியுடன் போலீசார் மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.காற்று காரணமாக, மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால், பல பகுதிகளில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு மக்கள் இரவில் சிரமப்பட்டனர். மின் ஊழியர்கள் மின் கம்பிகளை சீரமைத்து, மின் சப்ளை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், தமிழக -கேரளா எல்லையான, கீழ்நாடுகாணி அருகே சாலையில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது. கேரளா நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் அப்பகுதியை ஆய்வு செய்தனர். விரிசல் ஏற்பட்ட பகுதிக்கு வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு ஏற்படுத்தினர். தொடர்ந்து, வேறு சாலையில் வாகனங்கள் இயக்க அனுமதித்தனர். இந்த விரிசல் அதிகமானால், தமிழகம், கேரளா, கர்நாடக போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. பந்தலுாரில் பாதிப்பு
பந்தலுார் பகுதியில் பெய்து கையுன்னி அருகே சூரத் என்ற இடத்தில் நபீஷா என்பவரின் வீடு முழுமையாக இடிந்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியை வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். எருமாடு அருகே மானுார் பூதமூலா சாலையில் மரம் விழுந்து மின் கம்பிகள் அறுந்தன. அதிகாரிகள் அங்கு சென்று மரத்தை அறுத்து சீரமைத்தனர்.தேவாலா-- கூடலூர் சாலையில் கைக்கொல்லி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.கூவமூலா பகுதியில், சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது பெரிய மரம் ஒன்று விழுந்ததால் சேதம் ஏற்பட்டத. மின் கம்பங்களும் சாய்ந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. வருவாய் துறையினர்; மின் ஊழியர்கள் வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.