| ADDED : ஏப் 12, 2024 01:05 AM
கூடலுார்;முதுமலை, மசினகுடி மாயார் அருகே,குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானை, மரத்திலிருந்த பலா காய்களை பறித்து ருசித்த சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார், முதுமலை மசினகுடி பகுதிகளில் பலா காய் சீசன் துவங்கி உள்ளது. உணவுக்காக அதனை தேடி காட்டு யானைகள் வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் யானைகளால் ஆபத்து உள்ளது என்பதால், மரத்திலிருந்து பலா காய்களை அகற்ற வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், மசினகுடி மாயார் பகுதியில், மின்துறை குடியிருப்பு பகுதியில், பகலில் நுழைந்த காட்டு யானை, முன் கால்களை குடியிருப்பு மீது வைத்து, மரத்திலிருந்து பலா காய்களை பறித்து, அதனை ருசித்து சென்றது. யானையின் செயல்பாடு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால், யானைகள் குடியிருப்புக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'சீசன் காலங்களில் பலா காய்களை தேடி காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழையும் என்பதால், மரங்களிலிருந்து பலா காய்களை அகற்ற அறிவுறுத்தியும், அதனை மக்கள் கேட்பதில்லை.இதனால், இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க, மரத்திலிருந்து பலா காய்களை உடனடியாக அகற்ற வேண்டும்,' என்றனர்.