உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை, பலத்த காற்றுக்கு மாவட்ட முழுவதும்... விழுந்த 240 மரங்கள்!சாலையோர மரங்களை அகற்றினால் அச்சமில்லை

மழை, பலத்த காற்றுக்கு மாவட்ட முழுவதும்... விழுந்த 240 மரங்கள்!சாலையோர மரங்களை அகற்றினால் அச்சமில்லை

ஊட்டி;நீலகிரியில் கனமழை; பலத்த காற்றுக்கு இதுவரை, 240 மரங்கள் விழுந்துள்ளன; சாலையோரம் வலுவிழந்து காணப்படும் மரங்களை அகற்றினால் அச்சமில்லை.நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. கடந்த நான்கு நாட்களாக மழை சற்று குறைந்து, பலத்த காற்று வீசி வருகிறது.அதில், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருகின்றன. நேற்று முன்தினம் நள்ளிரவு வீசிய பலத்த காற்றுக்கு, மஞ்சூர் - ஊட்டி சாலையில், 'பெங்கால் மட்டம், கீழ் கைக்காட்ட, தேவர்சோலை, காந்தி பேட்டை, ரைட்டர் கடை, லவ்டேல், காந்திநகர்,' என, 6 இடங்களில் அடுத்தடுத்து பெரிய அளவிலான, 10 மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்தது. சம்பவ பகுதிக்கு நெடுஞ்சாலை, தீயணைப்பு துறையினர் வந்து மரங்களை அறுத்தனர்.பின், பொக்லைன் வரவழைக்கப்பட்டு மரங்கள் அகற்றப்பட்டது. ஊட்டி - மஞ்சூர் சாலையில் காலை, 11:00 மணிக்கு போக்குவரத்து முழுமைாக சீரானது. அதே போல், ஊட்டி - கோத்தகிரி சாலை, ஸ்பென்ஷர் சாலை, இத்தலார் சாலைகளில் விழுந்த மரங்களை தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினருடன் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு மரங்களை அகற்றினர்.தென் மேற்கு பருவ மழைக்கு இதுவரை மாவட்ட முழுவதும், 240 மரங்கள் விழுந்துள்ளன. காலை நேரத்தில் மஞ்சூர் வழித்தடத்தில் மரம் விழுந்து வருவதால், பெரும்பாலான பஸ்கள் சாலையில் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து முடங்கியதால் மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஆய்வு அவசியம்:

உள்ளூர் மக்கள் கூறுகையில்,'மாவட்ட முழுவதும் சாலையோரங்களில் ஏராளமான பழமையான மரங்கள் அபாயகரமான நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும், மாவட்ட முழுவதும், 30 மரங்கள் விழுந்துள்ளன.நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த ஊட்டி, குந்தா பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்,' என்றனர்.

சிறப்பு குழுக்கள் அமைப்பு

கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில்,''மாவட்டத்தில் பலத்த காற்றுக்கு விழும் மரங்களை தீயணைப்பு, நெடுஞ்சாலை துறையினருடன் பேரிடர் மீட்பு குழுவினருடன் சேர்ந்து அகற்றி வருகின்றனர். மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், உடனுக்குடன் சீரமைக்க, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை