| ADDED : பிப் 08, 2024 10:04 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள கருங்குரங்கள் கூண்டுக்குள் சிக்காமல் மக்களை துரத்தி கடித்து வருகின்றன.பந்தலுார் அருகே அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியில், ஒரே இடத்தில் ஏழு கருங்குரங்குகள் முகாமிட்டு உள்ளன. அதில், இரண்டு கருங்குரங்குகள் மனிதர்கள் பார்த்தால் துரத்தி கடிக்கிறது. கனகரத்தினம் என்பவர் குரங்கு கடித்ததில் படு காயமடைந்தார்.தொடர்ந்து வனத்துறையினர் வனச்சரகர் சஞ்சீவி தலைமையில் கூண்டு வைத்து, அதனுள் காய்கறி பழங்களை வைத்து கருங்குரங்கை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று காலை எஸ்டேட் உதவி மேலாளர் ராகுல் எஸ்டேட் பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட போது, அவரை தாக்கி கடிக்க குரங்கு முற்பட்டது. உடன் வந்த கள அதிகாரிகள் துரத்தியதால் அவர் தப்பினார்.அப்பகுதியில் கூண்டுகள் வைத்துள்ள நிலையில், அதன் அருகே உள்ள மரத்தின் உயரமான கிளையில் குரங்கு படுத்து உறங்குவது, வனத்துறையினரை பார்த்து சப்தமிட்டு மிரட்டும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.இதனால், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு வழங்கி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.