உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 90 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா... வீணாகும் அவலம்! -கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியதால் அதிருப்தி

90 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா... வீணாகும் அவலம்! -கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியதால் அதிருப்தி

பந்தலுார் : பந்தலுார் பஜாரில் நெல்லியாளம் நகராட்சி மூலம், 90 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா, புதர்கள் சூழ்ந்து கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது. பந்தலுார் பஜார் பகுதி தாலுகா தலை நகராக உள்ளதுடன், நெல்லியாளம் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலகங்களும் செயல்படும் முக்கிய இடமாக உள்ளது. இங்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதற்காக நெல்லியாளம் நகராட்சி சார்பில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், 90 லட்சம் ரூபாய் செலவில், நகராட்சிக்கு எதிரே உள்ள வயல் பகுதி பூங்காவாக மாற்றம் செய்யப்பட்டது. சுற்றிலும் மதில் சுவர்கள் கட்டி, இருக்கைகள், நடைபாதைகள், குடிநீர் வசதி மற்றும் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டது. ஆனால், இப்பூங்காவை பராமரிக்காமல் விட்டதால், பூங்கா அமைத்த இடத்தில் பந்தலுார் பஜார் பகுதி ஹோட்டல் மற்றும் குடியிருப்புகளின் மொத்த கழிவுகளும், தேங்கி நிற்கும் இடமாகவே உள்ளது. அத்துடன் புதர்கள் சூழ்ந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் புகலிடமாகவும் மாறியது. இதனால், இங்கு மக்கள் செல்ல முடியாத நிலையில், புதர்கள் சூழ்ந்து பூங்காவிற்காக அமைக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சேதமடைந்து வருகிறது. பந்தலுார் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதை, புதிய பஸ் ஸ்டாண்டில் போதிய இருக்கை மற்றும் வசதிகள், கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், நிறைவேற்ற நிதி இல்லை என்று காரணம் கூறும் நகராட்சி நிர்வாகம், மக்களுக்கு பயன்படாத வகையில், 90 லட்சம் ரூபாய் செலவு செய்து பூங்கா அமைத்து உள்ளது மக்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யானைகள் இங்கு வந்து சென்ற நிலையில், தற்போது கால்நடைகள் பாதுகாப்பாக மேய்ச்சலில் ஈடுபடும் இடமாக மாறி உள்ளது. இந்த வழியாகவே அனைத்து துறை அதிகாரிகளும் வந்து செல்லும் நிலையில், இந்த பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்படுத்த ஏதுவாக மாற்றம் செய்ய அதிகாரிகளுக்கும் ஆர்வமில்லை. நகராட்சி பொறியாளர் விஜயராஜ் கூறுகையில்,'' கமிஷனரிடம் பேசி, பூங்காவுக்கு மக்கள் வந்து செல்ல ஏதுவாக, பராமரித்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை