| ADDED : ஜன 09, 2024 12:20 AM
பந்தலுார்;பந்தலுாரில் நிலவும் சிறுத்தை அச்சம் தொடர்பாக, அனைத்து அரசியல் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.பந்தலுாரியில் ஏற்கனவே சிறுத்தை பிடிக்கப்பட்ட அதே பகுதியில், மீண்டும் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி உள்ளது. நேற்று அனைத்து கட்சியினர் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அனைத்து கட்சிகளும் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சிறுத்தையால் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் அனஸ் வரவேற்றார்.அதில், 'கூடலுார் கோட்டம், வனத்தையும் கிராம பகுதிகளையும் உள்ளடக்கி உள்ளது. இங்கு வன விலங்குகளால் மனிதர்கள் பாதிக்காத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மனித உயிருக்கு இழப்பீடு தொகை ஈடாகாது என்றாலும், போராட்ட தருணங்களில் சம்பவ இடத்திற்கு வரும் அரசியல் கட்சியினர்; அரசு அதிகாரிகள்; உள்ளூர் ஊடகத்தை ஊழியர்களை அவதுாறாக பேசும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'டான்டீ' தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.மேங்கோரேஞ்ச் பகுதியில் வனத்துறை முகாம் அமைத்து மற்றொரு சிறுத்தையை பிடிக்க வேண்டும்,' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், எம்.எல்.ஏ., ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ., திராவிடமணி, நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் சிவகாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.