கூடலுாரில் தேயிலை செடிகளை பாதுகாக்கும் பாக்கு மட்டைகள்
கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுாரில் கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றியதுடன், நடப்பு ஆண்டும் கோடை மழையும் ஏமாற்றி வருகிறது. இதனால், வறட்சியின் தாக்கம் அதிகரித்து, நிலத்தடி நீர் குறைந்து வருவதால், பொதுமக்கள் மற்றும் வனவிலங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.மேலும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. அதிகரித்து வரும் வெயில் காரணமாக, பல பகுதிகளில் தேயிலை செடிகள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேயிலை செடிகளை பாதுகாக்க விவசாயிகள், காய்ந்த பாக்கு மட்டைகளை தேயிலை செடியின் மீது, போட்டு பாதுகாக்கும் பணியை துவங்கி உள்ளனர். ''மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.