மேட்டுப்பாளையம், : ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார்கள் மற்றும் வாகனங்களால், மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு, பைபாஸ் சாலை அமைத்தால் மட்டுமே தீர்வாகும்.தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் முக்கியமானது ஊட்டி. முன்பெல்லாம் கோடை விடுமுறையின் போது தான் பலர் ஊட்டிக்கு சுற்றுலா வருவார்கள். ஆனால் இப்போது தொடர் விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களிலும் பலர் ஊட்டிக்கு சுற்றுலா வருகிறார்கள். தினம் தினம் நெரிசல்
இதனால், ஊட்டியின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் மேட்டுப்பாளையத்தில் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொங்கல் விடுமுறைக்காக நுாற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் ஊட்டிக்கு வந்துள்ளன. காலை, 7:00 மணி முதல் சாரை சாரையாக கார்கள், டெம்போ, சுற்றுலா பஸ்கள் என ஏராளமான வாகனங்கள், மதியம், 12:00 மணி வரை ஊட்டிக்கு சென்றன. ஒரே நேரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட கார்கள் வந்ததால், மேட்டுப்பாளையம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கார்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் காத்திருந்து, மெதுவாக ஊர்ந்து சென்றன.மேட்டுப்பாளையம் நகரில் சனி, ஞாயிறு மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது, வாடிக்கையான ஒன்றாகும். இதனால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. உள்ளூரில் உள்ள பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமலும், அவசரத்திற்கு மருத்துவமனை மற்றும் கடைகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகள்
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: நகரில், 50 ஆண்டுகளுக்கு முன், சாலைகள் மிகவும் அகலமாக இருந்துள்ளன. காலப்போக்கில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியதால் சாலையின் அகலம் குறுகியது. இதனால் தற்போதுள்ள சாலையில், ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும்.எனவே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்க, மேட்டுப்பாளையம் நகரில் பைபாஸ் சாலை அமைக்க வேண்டும். அல்லது மேட்டுப்பாளையம் நகரில் உள்ள ஊட்டி, சத்தியமங்கலம், அன்னூர், கோவை ஆகிய முக்கிய நான்கு சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் சாலைகளில் விரிவாக்கம் செய்து, நான்கு வழி சாலையாக மாற்றினால் மட்டுமே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.அதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
அமைச்சரிடம் கோரிக்கை
மேட்டுப்பாளையம் பைபாஸ் சாலை, காரமடை சாலையில் குட்டையூரிலிருந்து துவங்க உள்ளது. மாதேஸ்வரன் மலை, அன்னூர், சிறுமுகை ஆகிய சாலைகள் வழியாக, பவானி ஆற்றை கடந்து, கோத்தகிரி சாலை வழியாக, ஊட்டி சாலையில் சென்றடையும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டது. சாலைகள் அமைக்க தேவையான நிலங்கள் கையகப்படுத்த, நிலத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்நிலையில் திட்டத்தின் மதிப்பீடு, 600 கோடி ரூபாயாக உயர்ந்ததால், தமிழக அரசு, பைபாஸ் சாலை திட்டத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளது. மத்திய அரசு பைபாஸ் சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்கும் என, பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.இதற்கிடையில் மேட்டுப்பாளையம் நகரில் உள்ள சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்பினர், மத்திய இணை அமைச்சர் முருகனிடம், பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.