| ADDED : பிப் 12, 2024 08:57 PM
கோத்தகிரி:கோத்தகிரி கன்னிகா தேவி காலனி பகுதியில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் ஏற்பட்ட திடீர் தீயால் சுற்றுச்சுழல் பாதிக்கப்பட்டுள்ளது.கோத்தகிரி கன்னிகா தேவி காலனி பகுதியில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில், நகரில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. மட்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், மட்காத குப்பைகள் மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. இங்கு, நிரந்தரம் மற்றும் தற்காலிக தூய்மை காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, குப்பை மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில், நேற்று காலை வளம் மீட்பு பூங்காவில், தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. துர்நாற்றத்துடன் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. இதனால், கன்னிகா தேவி காலனி சுற்று வட்டார மக்கள் மற்றும் பிரதான குன்னூர் சாலையில் சென்றுவரும் டிரைவர்கள் மற்றும் பயணிகள் சிரமம் அடைந்தனர். மக்கள் கூறுகையில்,'இங்கு கொட்டப்படும் குப்பைகள் முறையாக கையாளப்படாததால், கரடி, காட்டு பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இங்கு சுற்றி திரிகின்றன. மேலும், குப்பைகளை ஆற்றில் துாக்கி வீசப்படுவதால், நீர் ஆதாரம் மாசடைகிறது. இது போன்ற தீ பற்றி எரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது,' என்றனர்.கோத்தகிரி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கூறுகையில்,''குப்பைகள் சரியான முறையில் துாய்மை காவலர்களால் கையாளப்படுகிறது. பகல் நேரத்தில் வெயில் அடிப்பதால், குப்பைகள் காய்ந்து காணப்படுகிறது. அங்கு தீ பற்றியது குறித்து தகவல் தெரிந்தவுடன், பேரூராட்சி துாய்மை காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்து விட்டனர். எதிர்காலத்தில், தீ பரவாமல் கண்காணிக்கப்படும்,''என்றார்.