| ADDED : ஜன 10, 2024 11:50 PM
அன்னூர் : அரசு வழங்கிய இலவச சேலை தரம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது.அன்னூர் தாலுகாவில் மூன்று பேரூராட்சி, 28 ஊராட்சிகளில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், வேட்டி, சேலை, பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு வழங்கும் பணி நேற்று துவங்கியது.அன்னூர் தாலுகாவில் உள்ள 81 ரேஷன் கடைகளில், 49 ஆயிரத்து 212 பேருக்கு சேலையும், 46 ஆயிரத்து 767 பேருக்கு வேஷ்டியும் வழங்கும் பணி துவங்கியது.அன்னூர் கூட்டுறவு பண்டக சாலையில் நடந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் இலவச வேட்டி சேலை விநியோகத்தை துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.வேட்டி சேலை விநியோகத்தை கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் வழங்கப்பட்ட சேலை தரம் குறைவாக உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.சிலர் கூறுகையில்,' சேலை மிகவும் லேசாக உள்ளது. இதை வீட்டில் தொட்டில் கட்டவோ அல்லது வேறு உபயோகத்துக்கு தான் பயன்படுத்த முடியும். வயதானவர்கள் மட்டுமே இந்த சேலையை உடுத்த முடியும். வேட்டியின் தரம் சுமாராக உள்ளது,' என்றனர்.