உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மின்சாரம் இல்லாமல் நீரேற்றும் ஹைட்ராம் : மக்களை வியப்பில் ஆழ்த்தும் 1796ம் ஆண்டின் இயந்திரம்

 மின்சாரம் இல்லாமல் நீரேற்றும் ஹைட்ராம் : மக்களை வியப்பில் ஆழ்த்தும் 1796ம் ஆண்டின் இயந்திரம்

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடி பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட, 'ஹைட்ராம்' நீரேற்று இயந்திரம் இன்றளவும் மக்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. பந்தலுார் அருகே, சேரம்பாடி பகுதியில், 'வெண்ட்வொர்த்' எஸ்டேட் ஆங்கிலேயர் காலம் முதல் செயல்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்கள் இதனை நிர்வகித்து வந்த காலத்தில், எஸ்டேட் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள், குடிநீர் தேவைக்காக வனப்பகுதிக்கு மத்தியில் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, 'ஹைட்ராம்' என்ற இயந்திரம் வடிவமைக்கப்பட்டு, அதனை இந்த பகுதியில் உள்ள நீரோடை அருகே பொருத்தி உள்ளனர். 'தானியங்கி சுழற்சி பம்பு' என்று அழைக்கப்படும் இந்த இயந்திரத்தில், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஏதும் இல்லாமல், தண்ணீரின் அழுத்தம் மூலம்,293 மீட்டர் உயரம் உள்ள, மேலாளர் பங்களாவுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தொட்டியில் நிரப்பி, தாழ்வான பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்புகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக பெரிய குழாயில் தண்ணீர் வந்து சிறிய குழாய் வழியாக தண்ணீர் வினியோகம் செய்யப்படும். ஆனால், இந்த இயந்திரத்தில் சிறிய குழாயில் வரும் தண்ணீரின் வேகத்திற்கு, தண்ணீரை பெரிய குழாய் வழியாக, இந்த இயந்திரம் மேலே கொண்டு சென்றுள்ளது. எஸ்டேட் பகுதியை ஒட்டிய, காட்சி முனை அருகே எஸ்டேட் வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ள, இந்த 'ஹைட்ராம்' இயந்திரம் இன்றளவும் பார்வையாளர்களை வியக்க செய்கிறது. எஸ்டேட் துணை மேலாளர் பிரபாகரன் கூறுகையில், ''கடந்த, 1796ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டை சேர்ந்த, ஜான் ஜோசப் மைக்கேல் என்பவர் மின்சாரம் மற்றும் எரிபொருள் இல்லாமல், உந்து சக்தி மூலம் தண்ணீரை மேட்டுப்பாங்கான பகுதிக்கு கொண்டு செல்லும், 'ஹைட்ராம்' இயந்திரத்தை கண்டுபிடித்தார். ஆறு வால்வுகள் கொண்ட இந்த பம்ப், இந்தியாவில் சேரம்பாடி மற்றும் ஆக்ரா பகுதியில் மட்டுமே உள்ளது. தற்போது, ஒரு வாழ்வு கொண்ட இந்த பம்புகள் தயாரித்து வரும் நிலையில், ஆறு வால்வுகள் கொண்ட இந்த பம்ப் குறித்து, தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் கொண்டு இந்த பகுதிக்கு வந்து பார்த்து செல்கின்றனர். இந்த பகுதி ஒரு காட்சி முனையாக உள்ளதால், தமிழக சுற்றுலாத்துறை முன் வந்தால், எஸ்டேட் நிர்வாகம் மூலம், இந்த பகுதியை சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற முடியும். இது போன்ற அதிசயத்தக்க இயந்திரங்களை, இளைய தலைமுறைகளும் தெரிந்து கொள்ள முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை