மக்கள் நலனுக்கு பணியாற்றுவேன்: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வில் உறுதிமொழி
கோத்தகிரி: கோத்தகிரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம், அக்., 27ல் துவங்கி, நவ.,2ம் தேதி வரை நடக்கிறது. மாநிலத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என, அரசு துறை அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில், விழிப்புணர்வு பேரணி நடந்தது. பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணியை, ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. ஜெயகுமார் மற்றும் போக்குவரத்து எஸ்.ஐ., சேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், 'நாட்டில் ஊழல் முக்கிய தடை யாக உள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும், நேர்மை மற்றும் கண்ணியத்துடன், ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக இருக்க வேண்டும்' என, பதாகைகளுடன், மாணவர்கள் முக்கிய சாலைகள் வழியாக பேரணி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தினர். தொடர்ந்து, லஞ்சம் கொடுக்காமல், வாங்காமல் வெளிப்படை தன்மையுடன், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன்; தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவேன்; ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்கு தெரிவிப்பேன் என, உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஊழல் தொடர்பான பிரச்சனைகள் இருப்பின், (டி.எஸ்.பி) 94981 47234, (இன்ஸ்பெக்டர்) 94981 24373, (ஸ்டோன் ஹவுஸ்) 0423 2443962 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் அறிவுறுத்தினர். இதில், போலீசார், பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பங்கேற்றனர்.