| ADDED : ஜன 25, 2024 12:11 AM
சூலுார் : தேர் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், என, அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.கருமத்தம்பட்டி அடுத்த விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் தைப்பூச தேர் திருவிழா நாளை மாலை நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு, சுகாதார பணிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் சூலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் மாதையன், அன்னம் ஆகியோர் பங்கேற்றனர்.தாசில்தார் நித்திலவல்லி பேசியதாவது:தேர் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாருடன் இணைந்து கோவில் நிர்வாகத்தினர் செய்ய வேண்டும். தேர் ஓடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்ற வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். தேர் ஓடும் வீதிகளின் குறுக்கே மின் கம்பிகள் இருந்தால் தற்காலிகமாக அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளாட்சி அமைப்பினர் கூடுதல் பணியாளர்களை நியமித்து தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையினர் அன்னதானம் மற்றும் திண்பண்டங்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், மற்ற துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி திருவிழா முறையாக நடக்க ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.