| ADDED : நவ 17, 2025 01:10 AM
குன்னூர்: குன்னூரில், குடியிருப்பு பகுதிக்கு வந்து நாய்களை வேட்டையாடி செல்லும் சிறுத்தையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குன்னூர் எடப்பள்ளி அருகே இளித்தொரை, இந்திரா நகர் பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, நேற்று முன்தினம் இரவு 10:50 மணியளவில், இந்திரா நகர் கணேஷ் என்பவரின் வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்றது, இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட அச்சப்படுகின்றனர். இப்பகுதியை சேர்ந்த இளையராஜா கூறுகையில், ஓராண்டிற்கு முன்பு கிராமத்திற்கு இரு குட்டிகளுடன் 4 சிறுத்தைகள் உலா வந்தன. இந்த பகுதியில் காட்டு பன்றிகள் அதிகம் இருந்ததை சிறுத்தை வேட்டையாடி உள்ளது. தற்போது இரவில் வரும் சிறுத்தை, நாய்களை வேட்டையாடி செல்கிறது. மாவட்ட வன அலுவலர் உட்பட அதிகாரிகளுக்கும், கிராமசபை கூட்டங்களிலும் மனுக்கள் கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து, வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றார்.