உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடும் பல விஞ்ஞானிகள்; அறிவியல் கருத்தரங்கில் தகவல்

 ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடும் பல விஞ்ஞானிகள்; அறிவியல் கருத்தரங்கில் தகவல்

கோத்தகிரி: 'உலக அளவில் பல விஞ்ஞானிகள் ராணுவ ஆராய்ச்சியில் மட்டுமே ஈடுபடுகின்றனர்,'என, அறிவியல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் நவ., 10ம் தேதி உலக அறிவியல் தினத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து, அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான இந்த தினம் கொண்டாடப்படுகிறது. வளர்ந்து வரும் அறிவியல் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், பொதுமக்களுக்கு இடையே, விவாதத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இந்த தினம் அமைந்துள்ளது. இதனை ஒட்டி, கேத்தி பாலாடா என்.எஸ்., ஐயா நினைவு மேல்நிலைப் பள்ளியில், சிறப்பு கருத்தரங்கு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: உலக அளவில், நவீன அறிவியலான 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலை வாய்ப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி பரவலாக பேசப்படுகிறது. இந்த நவீன அறிவியலால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறப்பட்டாலும், 'மைக்ரோசாப்ட்' போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்கி வருகிறது. மறுபுறம் பெரும்பாலான உலக நாடுகள் பாதுகாப்பு என்ற பெயரில், போர் கருவிகளை தான் உற்பத்தி செய்கின்றன. உலகில் உள்ள விஞ்ஞானிகளில், 80 சதவீதம் பேர், ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில், ஆராய்ச்சி மிக குறைந்த அளவில் தான் நடக்கிறது. அறிவியல், மக்கள் மற்றும் சமுதாயத்திற்கு என்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கோஷம்தான், உலக அறிவியல் தினத்தின் முக்கிய செய்தியாகும். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, புத்தக கண்காட்சி, விவாத மேடை மற்றும் கோளரங்கம் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் திரளான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி